தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக சின்னம், கொடி வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! - MHC REFUSE OPS FLAG APPEAL CASE

Madras High Court: அதிமுகவின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ்க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
ஓபிஎஸ்க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 2:08 PM IST

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனுவில்,“ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூலவழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்கள் அல்லது கட்சியின் தொண்டர்கள் புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில், இன்று (மார்ச்25) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

அதன்படி, இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில், “நிரந்தர தடை உத்தரவை அகற்றி தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க மறுப்பு தெரிவித்து, தடை உத்தரவை அகற்ற முடியாது என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டு ஜூன் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:வேட்பாளரே இல்லாத நெல்லையில் திமுக தலைவரின் பொதுக்கூட்டம்.. நெல்லை தொகுதி திமுக வசம் செல்கிறதா? நொடிக்கு நொடி பரபரப்பு! - M K Stalin Campaign In Tirunelveli

ABOUT THE AUTHOR

...view details