தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“புராதனச் சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை” - உயர் நீதிமன்றம்! - Gangaikonda Cholapuram temple case

Gangai Konda Cholapuram: கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள உணவகம், கழிப்பறைகளை ஆய்வு செய்து, அவை புராதனச் சின்னங்களுக்கு அபாயகரமானவை அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கும், மாநில தொல்லியல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat (புகைப்பட உதவி - TamilNadu Desk archival)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 5:36 PM IST

சென்னை:அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிk காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோ அமைப்பால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்திய தொல்லியல் துறை சார்பில் கோயிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு, நாட்டில் உள்ள அனைத்து புராதனச் சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதனச் சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைகளின் கடமை எனவும், புராதனச் சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தச் செயல்களையும் அவர்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

மேலும், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள உணவகம், கழிப்பறைகளை ஆய்வு செய்து, அவை புராதனச் சின்னங்களுக்கு அபாயகரமானவை அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கும், மாநில தொல்லியல் துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் இவை அமைய வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து, இந்திய தொல்லியல் துறை மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமியின் அரசாணையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல்.. என்ன காரணம்? - GO Quashed About Cauvery Canal

ABOUT THE AUTHOR

...view details