தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகுதியில்லாத செவிலியர்களைப் பணி நியமனம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு; தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Nurses Appointment Issue

Unqualified Nurses Appointment Issue: உரியத் தகுதியில்லாத செவிலியர்களைப் பணி நியமனம் செய்ததாக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Unqualified Nurses Appointment Issue Case
Unqualified Nurses Appointment Issue Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 6:46 PM IST

சென்னை: கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களைப் பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து 977 செவிலியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, செவிலியர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 977 ஒப்பந்த செவிலியர்களை முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்களில் நியமிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அதன்பிறகு உருவாகும் காலியிடங்களில் படிப்படியாக நியமிக்கப்படுவர் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை மீறி தகுதியான செவிலியர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் தகுதியில்லாத 963 செவிலியர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியமர்த்தி உள்ளதாகக் கூறி, நமக்கு நாமே செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செந்தில்நாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசியல் பிரமுகர்கள் பலர் சம்மந்தப்பட்டுள்ளதால் தனது புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பதால் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "பணியாளர்கள் நியமனம் தொடர்பாகப் பாதிக்கப்படாத மூன்றாவது நபரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அரசின் விளக்கத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:ஆதி திராவிடரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டா.. அதனை திரும்பப் பெறமுடியாது - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details