தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION

புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வடபழனி பாண்டியன் விடுதி இடத்தை கையகப்படுத்த அரசு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2025, 7:09 PM IST

சென்னை:புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வடபழனி பாண்டியன் விடுதி இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடம் புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் நிலத்திக்கான உரிமையை கோர முடியாது எனவும் நிலத்திற்கான உரிமை இல்லாததால் இழப்பீடும் கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடபழனியை சேர்ந்த டி.சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சென்னை சாலிகிராமத்தில் கிருஷ்ணவேணி அம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைப்பதற்காக அவ்விடத்தை அரசு எடுத்து அதற்கான இழப்பீட்டையும் வழங்கியுள்ளது. இதனையடுத்து, மீதமுள்ள பகுதியில் வீடு மற்றும் வணிக வளாகத்தை கிருஷ்ணவேணி கட்டியுள்ளார்.

ஆனால், இந்நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நோட்டீஸுக்கு தடை விதித்துள்ளது. தொடர்ந்து, மெட்ரோ ரயில் பணிகளுக்காக புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி, மீண்டும் இடத்தை காலி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய இழப்பீட்டை பெறவும், உரிமையியல் வழக்கு தொடரவும் அனுமதித்துள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளியின் நுழைவாயில்களில் சாதிப் பெயரை எழுதலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி!

இந்நிலையில், இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆவணங்களின் படி குறிப்பிட்ட இடம் நத்தம் புறம்போக்கு என கூறப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் உள்ள யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு செய்த புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாட்கள் குடியிருக்கலாம். ஆனால், வணிக நோக்கித்திற்காக பயன்படுத்தல் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில், மெட்ரோ ரயில் பணிகளால் ரூ. 4 கோடியே 93 லட்சம் அளவுக்கு கட்டிடம் சேதமடைந்துள்ளது. கட்டிடம் புனரமைப்பிற்கு ரூ.80 லட்சமும், தொழில் நஷ்டத்திற்கு ரூ.1 கோடியே 80 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “குறிப்பிட்ட இடம் புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மனுதாரர் நிலத்திக்கான உரிமை கோர முடியாது. நிலத்திக்கான உரிமை இல்லாததால் இழப்பீடும் கேட்க முடியாது” என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details