சென்னை :அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் காட்சி பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளதாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக, ரூ. 5 லட்சம் வீதம், ரூ.8 கோடியே 55 லட்சம் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட உள்ளதாகவும், பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.