சென்னை:ஆருத்ரா மோசடி வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டதையடுத்து திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமாரின் ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று (ஏப்.29) தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு எதிரான, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், 25வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபிசிஐடி குற்றம் சாட்டுவது போல், தான் திருவள்ளூர் கிளை இயக்குனர் இல்லை எனவும் அலுவலக ஊழியராக மட்டுமே தான் பணியாற்றியதாகவும் கூறினார்.