சென்னை:ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இந்திரா வீட்டு வசதித் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், சென்னையை அடுத்த சோழவரம் பகுதியில் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை வீடு கட்டாதவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.