திருநெல்வேலி:கேரளாவில் இருந்து எல்லை தாண்டி வந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள், 30 லாரிகளில் மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற மருத்துவக் கழிவுகள் அள்ளும் பணிகள் முழுமையாக முடிவு பெற்றுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை, 18 லாரிகள், நேற்று (டிசம்பர் 23) திங்கட்கிழமை 12 லாரிகள் என மொத்தம் 30 லாரிகளில் கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குப்பையை ஏற்றிச் சென்ற லாரிகள் (ETV Bharat Tamil Nadu) மேலும், கழிவுகள் கொட்டியது சம்பந்தமாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி, முக்கூடல், சீதப்பற்ப நல்லூர், முன்னீர்பள்ளம் என நான்கு காவல் நிலையங்களில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், கொண்டா நகரம், பழவூர், சீதபற்பநல்லூர், திடியூர் ஆகிய நான்கு ஊராட்சிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இது சம்பந்தமாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 3 நாட்களுக்குள் கழிவுகள் அகற்றப்பட்ட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் (ETV Bharat Tamil Nadu) உத்தரவின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த உதவி ஆட்சியர் சாக்சி தலைமையில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட 50 பேர் இப்பணியை துவங்கினர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள், குப்பை அள்ளும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க:எல்லை தாண்டி நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - 30 லாரிகளில் கேரளாவுக்கு திருப்பி அனுப்பிவைப்பு!
அதன்படி, நேற்று முன்தினம் ஏழு இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகள் அள்ளப்பட்டு, 18 லாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக மூன்று இடங்களில் குப்பைகளை அள்ளும் பணி நடைபெற்று, 12 லாரிகளில் சுமார் 180 டன் மருத்துவ கழிவுகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேற்றில் சிக்கிய வாகனம் (ETV Bharat Tamil Nadu) இதற்கிடையே 12 லாரியில் ஒரு லாரி சாலை ஓரம் சேற்றில் பதிந்து கொண்டதால், இரவு வரை அதிகாரிகள் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து லாரியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதால், மீதமுள்ள 11 லாரிகளை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ராட்சத பொக்லைன் இயந்திரம் வந்து, சேற்றில் சிக்கிய லாரியை மீட்டுள்ளது. இதனையடுத்து, அந்த லாரியும் இருவோடு இரவாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் நடைபெற்ற கழிவுகள் அகற்றும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று இரவு கேரளா அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், குப்பைகள் அள்ளி முடிக்கப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறுகையில், “இரண்டு நாட்கள் நடைபெற்ற மருத்துவக் கழிவுகள் அள்ளும் பணிகள் முழுமையாக முடிவு பெற்றுள்ளது. நேற்று முன்தினம் 18 லாரிகளிலும், நேற்று 12 லாரிகளில் என மொத்தம் இரண்டு நாளில் 30 லாரிகளில் கழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.