சென்னை:கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடருக்கு பின் இருதய பாதிப்புகள் பெரும் அளவில் கண்டறியப்படுகின்றன. இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து பல வகைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி குறித்தான விவரங்கள் விரைவில் புத்தகமாக வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19 ந் தேதி முதல் 21 ந் தேதி வரை 3 நாட்கள் மருத்துவத்தின் எதிர்காலம் (Future of Medicine) என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், நிதிநிலை அறிக்கையில் , 91வது அறிவிப்பில், பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மாநாடு 3 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 4,465 பேர் ஆகும், முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8840 பேர் ஆகும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து வரும் மாணவர்கள் 63,310 பேர் ஆகும். தமிழ்நாடு முழுவதும் 738 கல்லூரிகளில் மருத்துவம், செவிலியர், பிசியோதெரபி பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த மாணவர்கள் தங்களின் தரத்தினை மேம்படுத்திக்கொள்வதற்கும், ஆராய்ச்சி திறனை அதிகரிப்பதற்கும் இந்த மாநாடு தொடங்கப்பட்டு நடத்தி
முடிக்கப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மருத்துவ மாநாடுகள் நடத்தப்படுகின்றது.
கடந்த ஓராண்டிற்கு முன்னாள் சிங்கப்பூர் நாட்டில் நடத்தப்பட்ட அவசர கால மருத்துவ சிகிச்சைகள் குறித்த மாநாட்டில் பங்கேற்று இருக்கின்றேன். இருதயவியல், மகப்பேறு மருத்துவம், சிறுநீரக துறை, மனநல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், அவசர சிகிச்சை மருத்துவம் என்று ஏதாவது ஒரு துறை சார்ந்து தான் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உலகில் முதன்முறையாக எதிர்கால மருத்துவம் எனும் தலைப்பில் அனைத்து துறைகளும் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட்டுள்ளது.