காஞ்சிபுரம்:திமுக துவங்கி 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த பவள விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது விழா மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தமிழகத்தில் 40க்கு 40 வெற்றியைப் பெற்றுக்கொடுத்தீர்கள். மோடியும், அவருடைய கூட்டமும் நாட்டிற்கான நாச வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அண்ணா முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட போது, ஆளுநர் அழைப்பு விடுத்தார். அன்றைக்கு இருந்த ஆளுநர் நல்லவர். ஆனால், இன்றைக்கு இருக்கும் ஆளுநர் போல அல்ல அன்றைக்கு இருந்த ஆளுநர்.
பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் பெரியாரைப் பார்க்க திருச்சி சென்றார். புது மாப்பிள்ளை போல என்னைப் பார்க்க அண்ணா வந்தார். நான் தலைகுனிந்து புது பெண் போல மனமேடையில் அமர்ந்திருந்தேன் என பெரியார் தெரிவித்தார். பெரியாரின் கொள்கைகளைச் சட்ட மசோதாக்களாகவும், திட்டங்களாகவும் அண்ணா செயல்படுத்தினார். எங்கிருந்தாலும் பெரியார் என் நெஞ்சில் இருப்பார், பெரியார் நெஞ்சில் நான் இருப்பேன் என அண்ணா தெரிவித்தார்.