கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் நவீன கண்ணாடி பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான வெள்ளி விழா வரும் 1 ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இதனைக் கொண்டாடும் வகையில் இன்று (30/12/2024) மற்றும் நாளை (டிசம்பர் 31) திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடி பால கட்டுமான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான பணிகளை ஆரம்பம் முதலே அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இறுதிக்கட்டப் பணிகளை அவர் முழுவீச்சில் மேற்பார்வையிட்டு வருகிறார். இதற்காக அவர் கன்னியாகுமரியில் தங்கி இறுதிக் கட்டப் பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனித்து வருகிறார். கண்ணாடி பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.