சென்னை: பல்லாவரம் அருகே போலீசார் உடை அணிந்து வணிகர்களிடம் பணம் வசூல் செய்த நபரை கைது செய்த சங்கர் நகர் காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி, போலீசார் சிலை சோதனை செய்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 29) ஞாயிற்றுக்கிழமை சங்கர் நகர் பகுதியில், காவல்துறை சீருடை அணிந்த ஒருவர், அப்பகுதியில் உள்ள கடையில் ரூ. பதினைந்தாயிரம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர், இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலி போலீசாரை மடக்கி பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, அவரை வாகனத்தில் ஏறும்படி கூறிய நிலையில், “எங்கள் கேம்ப் அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும்” என என அந்த நபர் நாடகமாடியுள்ளார். தொடர்ந்து, போலீசார் அந்த நபரை வாகனத்தில் ஏற சொன்ன நிலையில், “யூனிபார்ம் மேலே கை வைக்காதீங்க, கையை எடுங்கள்” என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: "பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்" - தவெக விஜய் கைப்பட கடிதம்!
இதனையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரது யூனிபார்மில் தமிழக அரசு முத்திரை மற்றும் எஸ்ஐ பதவிக்கான ஸ்டார் ஆகியவை இல்லாததால் அவர் போலி போலீசார் என்பதை உறுதி செய்து, அவரை கைது செய்து சங்கர்நகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு கிராமத்தைச் சேர்ந்த முரளி (40) என்பதும், இவர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுந்து பிரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும், விசாரணையில் இது போன்று ஏற்கனவே போலீஸ் எனக் கூறி வியாபாரிகளை மிரட்டி கடை ஒன்றில் 15 ஆயிரம் ஏமாற்றி சென்றதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற ஏமாற்றுபவர்களிடம் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வணிகர்கள், போலீஸ் என யாராவது சோதனை செய்தால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.