சென்னை: நடப்பாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நேற்று (பிப்.21) மேயர் பிரியா தாக்கல் செய்தார். இந்த நிலையில், அந்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் 34 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர்.
பட்ஜெட் மீதான விவாதத்தைத் துவக்கி வைத்து நிலைக்குழு தலைவர் (நகரமைப்பு) இளைய அருணா பேசும்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தது போல மாநகராட்சி பட்ஜெட்டும் அமைந்துள்ளது. மேயர் மேம்பாட்டு நிதி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மாமன்ற உறுப்பினர்கள் நிதி உயர்த்தப்பட்டது போதாது. உறுப்பினர் நிதியும் 50 சதவீதம் உயர்த்த வேண்டும்.
மும்பை மாநகராட்சியில் உள்ளது போலக் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க மீன்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சாலைகளில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் சென்னையின் அழகு கெட்டுப் போகிறது. அந்த வாகனங்களை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பட்ஜெட் கல்வியாளர், தொழில்முனைவோர், மருத்துவர்கள், எதிர்க்கட்சியினர் என அனைவரும் பாராட்டும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, "இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்தாலும், தமிழக மக்களுக்கு நாங்கள் சேவையாற்றுவோம் என்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்தார். முதலமைச்சரின் இரு கண்களில் ஒரு கண் சென்னை மாநகராட்சி. மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு 27 மற்றும் சுகாதாரத்திற்கு 19 அறிவிப்புகள் வெளியிட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, சென்னை பள்ளிகளுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். சென்னை பள்ளிகள் தரத்தில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் அதைத் தொடராமல் தரத்தைக் குறைத்து விட்டனர். ஊழியர் பற்றக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.