மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில் சேவை, கடந்த ஆண்டு சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. அதனைத் தொடர்ந்து, மறுமார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.
முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அதிக அளவில் பயணித்து வருகின்றனர். தற்போது சேலம் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதில் இருந்து பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வந்தது. ஆகையால், 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து 16 பெட்டிகளாக இயக்க வேண்டும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவரும் ரயில்வே நிர்வாகத்திடம் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு மாறாக, 12 பெட்டிகளுடன் இயங்கி வந்த ரயிலை 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர், திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.