மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொப்பியம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு 4 பேர் காரில் சாராயம் கடத்தி சென்றனர். அப்போது, நடமாடும் சோதனைச் சாவடி பிரிவைச் சேர்ந்த போலீசார், அந்த காரை வழி மறித்த போது சாராயம் கடத்தி வந்த கும்பல் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து காரை வழிமறித்த தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மீது காரை ஏற்றியுள்ளனர்.
அதில், மார்பு எலும்புகள் உடைந்து படுகாயம் அடைந்த தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இந்த கொலை வழக்குத் தொடர்பாக மீன்சுருட்டியைச் சேர்ந்த காரை ஓட்டிய கலைச்செல்வன்(54), சங்கர்(44), ராமமூர்த்தி(44), திருவிடைமருதூர் புளியம்பட்டியைச் சேர்ந்த கருணாகரன்(54) ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் சாராய விற்பனை செய்த கலைச்செல்வனையும், கருணாகரனையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள்மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, இவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.