கோயம்புத்தூர்:தமிழகத்தில் ஆண்டுதோறும் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே 6 மாதங்களுக்கு ஒருமுறை பட்டாம்பூச்சிகளின் இடம் பெயர்வு நடக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது பட்டாம்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி, சிறுவாணி, ஆனைமலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏற்காடு, பச்சமலை, கொல்லிமலை, கல்வராயன் மலைகளுக்கு செல்கின்றன.
அதுபோல் வடகிழக்கு பருவமழை காலத்தில் அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடம்பெயர்வு நடப்பது வழக்கம். அதன்படி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வு துவங்கி உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவு பட்டாம்பூச்சிகளை காண முடிகிறது.
குறிப்பாக நீர் நிலைகள், காடுகளில் பட்டாம்பூச்சிகளின் இடம் பெயர்வைக் காண முடிகிறது. இதில், வெள்ளலூரில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் அதிகளவிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதால் அதனை காண பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வருகின்றனர்.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், "ஆரம்பத்தில் வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லாத்தால் குளம் வரண்டு காணப்பட்டது. பின்னர் அதன் ராஜ வாய்க்கால்கள் தூர்வாரப்பட்ட பின்னர் குளத்திற்கு தண்ணீர் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பறவைகளும் வந்ததால் இப்பகுதி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.