கோயம்புத்தூர்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கோவையில் காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், மாலை சுமார் இரண்டு மணி நேரம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழையும், ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்தது.
குறிப்பாக, சிங்காநல்லூர், காந்திபுரம் ரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் சாக்கடை நீர் வெளியேறியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
லங்கா கார்னர் பாலம், அவிநாசி மேம்பாலம் அடியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சிப் பணியாளர்கள் மழை நீரை அகற்றும் பணியிலும், மழைநீரில் அடித்து வரப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டனர்.