சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து வருபவர், நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் நடித்து ரசிக்கப்பட்டவர். இவர் நடிப்பு தவிர்த்து, அரசியல் களத்திலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்.
இதற்காக வேலூர் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்தவர், வாக்கு இயந்திரப் பெட்டி இருட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தனது சின்னம் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயிலின் காரணமாக பல்வேறு இடங்களில் வாக்களிக்க வந்த 4 பேர் (ஒருவர் தேர்தல் பணி தன்னார்வலர்) உயிரிழந்துள்ளது தொடர்பாக தற்போது மன்சூர் அலிகான் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.