திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய பகுதிகள் சிங்கப்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனம் அங்கு தேயிலை தோட்டம் நடத்தி வந்தது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கான குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைவதால் அந்தப் பகுதிகள் நீதிமன்றம் மூலம் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டதையடுத்து முன்கூட்டியே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற பிபிடிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, தற்போது அங்கு சுமார் 500 தொழிலாளர்கள் பணி புரியும் நிலையில் அவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டு ஆக.7க்குள் வீடுகளை காலி செய்து கீழே இறங்கும்படி கூறியதுடன் 25% பண பலன்களும் வழங்கப்பட்டது.
ஆனால், சுமார் நான்கு தலைமுறைகளாக இங்கு வசிக்கும் தங்களுக்கு தேயிலைத் தோட்டத்தைத் தவிர வேறு வாழ்வாதாரம் கிடையாது எனவே நாங்கள் தொடர்ந்து இங்கேயே வசிக்கவும் தேயிலை தோட்டத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தொழிலாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
தபால் நிலையம்:இந்த நிலையில் நாடு முழுவதும் தபால் துறை மூலம் கிராம தக்ஷேவா மற்றும் உதவிக் கிளை தபால்காரர் உள்ளிட்ட 44,228 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணியாளர்கள் தேர்வு செய்ய அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலை கிராமங்களில் ஒன்றான நாலுமுக்கு தபால் நிலையத்தில் கிராம தக்ஷேவா மற்றும் உதவிக்கிளை தபால்காரர் என இரண்டு பணியிடங்களும் அதில் அடங்கியுள்ளது. ஏற்கனவே மலை கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை நடந்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மறு உத்தரவு வரும் வரை காலி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள இந்த இரண்டு பணியிடங்களால் தபால் நிலையம் காலி செய்யப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் பொது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் அங்குள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சேலம்: எடப்பாடி பகுதியில் சிறுத்த நடமாட்டம்.. பசு மாட்டை அடித்துக் கொன்றதால் பரபரப்பு!