தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடிவுக்கு வருகிறதா மாஞ்சோலை ரஸ்க் கடை சகாப்தம்?.. 'எஸ்டேட் பேக்கரி' கடந்து வந்த பாதை..! - Manjolai Rusk - MANJOLAI RUSK

Manjolai Estate Bakery: ருசியான மாஞ்சோலை ரஸ்க் குறித்தும், அவை தயாராகும் எஸ்டேட் பேக்கரி கடந்து வந்த பாதை குறித்தும் மாஞ்சோலை எஸ்டேட் பேக்கரியின் உரிமையாளர் பல சுவாரசியமான தகவல்களை ஈடிவி பாரத் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எஸ்டேட் பேக்கரி மற்றும் மாஞ்சோலை ரஸ்க்
எஸ்டேட் பேக்கரி மற்றும் மாஞ்சோலை ரஸ்க் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:58 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு அணையைத் தாண்டி சுமார் 3000 அடி உயரத்தில் மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிக்கம்பட்டியைச் சேர்ந்த ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது.

மாஞ்சோலை எஸ்டேட் ரஸ்க் பேக்கரி (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த தி பாம்பே டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் (பிபிடிசி) 1929ஆம் ஆண்டு இங்கு தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காக சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து இந்த வனப்பகுதியை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கியது.

அதன்படி, சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி ஊத்து ஆகிய பகுதிகளை குத்தகைக்கு வாங்கிய பிபிடிசி நிறுவனம் அங்கு தேயிலைத் தோட்டங்களை அமைத்தது. மேலும், பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து இங்கு தொழிலாளர்களை அழைத்து வந்து தேயிலை உற்பத்தி செய்து வந்தது.

மேலும், மாஞ்சோலை தேயிலையின் சுவை நல்ல தரமானதாக இருப்பதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையை வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுமட்டும் இல்லாது மாஞ்சோலையில் தங்கியபடி பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, பிபிடிசி நிர்வாகம் குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது.

இதுபோன்ற நிலையில்தான், மாஞ்சோலையில் தேயிலை எஸ்டேட் அமைத்துள்ள பிபிடிசி நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால், அந்நிறுவனம் தொழிலாளர்களுக்கு சமீபத்தில் முன்கூட்டியே விருப்ப ஓய்வு கொடுத்தது.

ஆனால், நான்கு தலைமுறைகளாக வசிக்கும் தொழிலாளர்கள் திடீரென தங்களை வெளியேற்றுவதை ஏற்க மறுப்பு தெரிவித்து, தங்களுக்கு மாஞ்சோலையிலேயே வாழ்வாதாரத்தை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இத்தகைய சூழலில், மாஞ்சோலை விவகாரம் குறித்து தொழிலாளர்கள் தொடுத்த வழக்கில் அவர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஆண்டுக்கு ஆறு மாதம் மழைப்பொழிவு இருக்கும் மாஞ்சோலையில் ஆண்டு முழுவதும் இங்கே குளிர்ந்த வானிலை நிலவும் என்பதால், இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம். எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அங்குள்ள குளிர்ந்த சூழலுக்கு ஏற்ப தின்பண்டம் தயாரித்தால் நல்ல தொழிலாக அமையும் என்று 80 ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சோலையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் 'எஸ்டேட் பேக்கரி'.

இந்த பேக்கரியில் தயாரிக்கப்படும் ரஸ்க் மிகவும் தனித்துவம் வாய்ந்த சுவையுடன் திகழ்ந்ததால் தொழிலாளர்கள் மற்றும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில், மாஞ்சோலை என்றாலே தேயிலைத் தோட்டம் என்ற சிறப்பைத்தாண்டி மாஞ்சோலை எஸ்டேட் பேக்கரி ரஸ்க் மிகவும் பெயர் பெற்றது.

இதுகுறித்து எஸ்டேட் பேக்கரியை நடத்தி வரும் குமாரி என்பவர் கூறுகையில், "மாஞ்சோலையில் பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நெவின் என்பவரது குடும்பம் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சோலையில் 'எஸ்டேட் பேக்கரி' என்ற பெயரில் பேக்கரி ஒன்றை தொடங்கியது.

இந்த பேக்கரியில்தான் எனது தந்தை சிங்காரம் பணியாற்றினார். அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, நெவின் குடும்பத்திடம் இருந்து எனது தந்தையே இந்த பேக்கரியை முழுமையாகப் பெற்று 50 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வந்தார். தற்போது நான் நடத்தி வருகிறேன்.

பெரும்பாலும், முட்டை மற்றும் நெய் குறைந்த அளவே பயன்படுத்தி, தண்ணீர் கலந்துதான் ரஸ்க்கை தயாரிப்பார்கள். ஆனால், நாங்கள் தயாரிக்கும் ரஸ்க் தண்ணீர் கலக்காமல் அதிக அளவு முட்டை மற்றும் நெய் பயன்படுத்தித் தயாரிக்கிறோம்.

மேலும், தண்ணீர் சேர்த்தால் விரைவில் ரஸ்க் கெட்டுவிடும். ஆனால், இங்கு தண்ணீர் சேர்க்காமல் முட்டை அதிகளவு சேர்த்து ரஸ்க் தயாரிப்பதால் மூன்று மாதங்கள் ஆனாலும் மாஞ்சோலை ரஸ்க் கெட்டுப் போகாமல் மொறுமொறுவென சுவையாக இருக்கும்.

இப்படி மாஞ்சோலை ரஸ்க்கின் சுவை தனித்துவமாக இருக்கும் என்பதாலேயே மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். தற்போது வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது வேதனையாகதான் இருக்கிறது. தொடர்ந்து மலையின் கீழே கடை அமைக்க திட்டமிட்டுள்ளோம்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் குமாரி.

இதையும் படிங்க:இசையை தடை செய்கிறதா இஸ்லாம்?: சந்தனக்கூடு விழாவில் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரியம்!

ABOUT THE AUTHOR

...view details