தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இண்டிகோ விமானத்தில் நடுவானில் பெண் பயணியிடம் சில்மிஷம்.. சென்னையில் ஆண் பயணி அதிரடி கைது - CHENNAI AIRPORT

டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பெண் பயணியை சில்மிஷம் செய்த ஆண் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 4:09 PM IST

சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று 164 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (43) என்பவர் தனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சென்னையை சேர்ந்த 37 வயது பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்று உள்ளார்.

இதனால் பெண் பயணி விமானத்திற்குள் கூச்சலிட்டு விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் விமான பணிப்பெண்கள் ராஜேஷை கடுமையாக எச்சரித்துள்ளனர். அப்போது ராஜேஷ் தெரியாமல் கைபட்டு விட்டது என்று சமாளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிதுநேரம் கழித்து மீண்டும் இதே செயலில் ஈடுபட்டதால், அந்த பெண் பயணி மீண்டும் விமான பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இதனை பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் தெரிவித்துள்ளனர்.

தலைமை விமானி சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, விமானத்துக்குள் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபடுவதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படியு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க :எமர்ஜென்சி கதவைத் திறந்த மும்பை பயணி.. ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

இதனையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பயணி ராஜேஷை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பின்பு அவரை பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பயணி இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு சென்று ராஜேஷ் மீது முறைப்படி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலர்கள், ராஜேஷை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் ராஜேஷை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details