மதுரை:'தன்னுடைய நீண்டநாள் கோரிக்கையை ஊடகத்தின் வாயிலாக வெளிக்கொண்டு வந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் செல்லும் சாலையில், அப்பன்திருப்பதிக்கு அருகே அமைந்துள்ளது பில்லுசேரி எனும் சிறிய கிராமம். இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்து தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர், பெ.சின்னப்பிள்ளை.
இதன் காரணமாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அன்றைய பிரதமர் வாஜ்பாயி கையால் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதனையடுத்து, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கையால் ஔவையார் விருதும், 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
இந்நிலையில் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நேர்காணல் அளித்திருந்தார். இதனையடுத்து நாம், “எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை?” என்ற தலைப்பின் கீழ், மகளிர் தினத்தன்று இந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம்.