மதுரை:மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, மீனாட்சிபுரம், மாங்குளம், கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், கல்லம்பட்டி, தெற்கு தெரு, புலிப்பட்டி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5000 ஏக்கரில் அமையவிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பாரம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவித்திடு வேளாண்மை மண்டலமாக்கிட சட்டம் இயக்கம் மற்றும் டங்ஸ்டன் சுரங்கங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு என பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து பேசிய டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, “டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பல்வேறு வகையான உயிரினங்களின் வாழ்விடமாக அரிட்டாபட்டி திகழ்கிறது. இதுபோன்ற இடங்களை கனிம சுரங்கம் அமைப்பதற்காக ஏலம் விடுவதை ஏற்க முடியாது. ஐந்தாயிரம் ஏக்கர் என இவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிறகு ஐம்பதாயிரம் ஏக்கராக அது மாறும். இது மேலூர் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திகிறது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இந்த மக்களுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்ல நினைக்கிறது? இந்த திட்டம் மேலூர் பகுதிக்கு மட்டுமின்றி மதுரைக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய திட்டமாகும். மேலூர் பகுதி மக்களை அகதிகளாக்கும் திட்டத்தின் அடிப்படையில் மோடி அரசு இந்த திட்டத்தை கொண்டு வருகிறது என குற்றம் சாட்டுகிறோம். இதற்காக நாங்கள் கூட்டமைப்பாக இணைந்து தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்” என்றார்.