தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

" மூணு மாசமா பென்சன் வரல".. மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேதனை! - pension issue - PENSION ISSUE

Madurai Kamarajar University: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கிடைக்கும் ஓய்வூதியம் மட்டுமே வாழ்வாதாரமாகி போன சூழலில், அதற்கும் கூட அவ்வப்போது போராடி பெறுகின்ற நிலை ஏற்படுகிறது என முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.லட்சுமணன் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

காமராஜர் பல்கலைக்கழக நுழைவு வாயில், ம.லட்சுமணன்
காமராஜர் பல்கலைக்கழக நுழைவு வாயில், ம.லட்சுமணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:41 PM IST

மதுரை:தமிழகத்தின் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்களுள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் (ம.கா.ப.) ஒன்று. கடந்த 1966-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 57 ஆண்டுகளாகத் தென் மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. அண்மைக் காலமாக போதுமான நிதி வசதியின்றி பணியாற்றும் நபர்களுக்கு ஊதியம் தருவதற்கு இயலாமல் தள்ளாடி வருகிறது.

முன்னாள் துணைவேந்தர் ம.லெட்சுமணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் அவ்வப்போது போராட்டங்களும் வெடித்து வருகின்றன. இதற்கிடையே இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கூட ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளரும், அறிவியலாளருமான முனைவர் ம.லட்சுமணன் (93) ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்.

முனைவர் லட்சுமணன், தமிழ் திரை இசையுலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தி ராமமூர்த்தியின் தம்பி ஆவார். இவரது மனைவி, மகன் இறந்துவிட்ட நிலையில், மகள் மற்றும் பணியாளர்களின் உதவியோடு வாழ்ந்து வருகிறார். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

மேலும் 27 முனைவர்களை உருவாக்கியதுடன், மூன்று துணை வேந்தர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 மாதங்களாக ஓய்வூதியம் வராமல் இருக்கிறது எனவும், அப்படியே ஓய்வூதியம் வந்தாலும் தாமதமாக தான் வருகிறது என நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் வேதனையோடு தெரிவிக்கின்றார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் துணைவேந்தர் லட்சுமணன், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முந்தைய துணைவேந்தர்களின் பல்வேறு முயற்சிகள் காரணமாக ம.கா.ப கழகம் கல்வியில் உலகத்தரம் வாய்ந்ததாகவும், வருமானம் அதிகம் கொண்டதாகவும் விளங்கியது.

இங்கு தொடங்கப்பட்ட அஞ்சல் வழிக் கல்வி உலகம் முழுவதும் மாணவர்களைக் கொண்டு வந்ததோடு, வருமானத்தையும் அதிகரிக்கச் செய்தது. ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு யுஜிசி கொண்டு வந்த கட்டுப்பாடுகள், இந்த பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மற்ற பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பல்கலைக்கழக வருமானம் குறைய தொடங்கியது.

இதன் காரணமாக சம்பளம், நிர்வாகம் உள்ளிட்ட பல பிரச்னைகள் எழுந்தன. இதையெல்லாம் நிவர்த்தி செய்ய தமிழக அரசைச் சார்ந்தே இயங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. தொடக்கத்தில் எந்தவித தயக்கமுமின்றி நிதியை வழங்கி வந்த தமிழக அரசு, தற்போது அரசியல் காரணங்களுக்காக நிதி உதவியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த 3 ஆண்டுகளாக பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதில்லை. பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி இல்லாதபோது, இவற்றையெல்லாம் தார்மீக அடிப்படையில் தமிழக அரசுதான் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் அரசு கருவூலம் மூலமாக ம.கா.ப. கழக ஓய்வூதியர்களுக்கு பணம் வழங்கலாம் அல்லது சுமார் ரூ.1300 கோடியை வைப்புத்தொகையாக நிறுவி, அதன் வட்டியில் ஓய்வூதியத்தை வழங்கினால் நல்லது" என்றார்.

பின்னர் பேசிய ம.கா.ப.கழக ஓய்வூதியதாரர் சங்க செயலாளர் சுவாமிநாதன் கூறுகையில், "முன்னாள் துணைவேந்தர் ம.லட்சுமணன் ஓய்வூதிய வாழ்க்கை என்பது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல தான். லட்சுமணனை போல மொத்தம் 1195 பேர் ஓய்வூதியதாரர்களாக உள்ளனர்.

அவர் முன் வைத்த இரண்டு வேண்டுகோள்களில் ஏதேனும் ஒரு வழியில் எங்களுக்கு உதவலாம் அல்லது ஆண்டிற்கு ஒரு முறை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில் எங்களுக்கும் தொகை ஒதுக்கி தமிழக அரசு கருணை காட்ட வேண்டும்" என்கிறார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மருத்துவ செலவுகளுக்குக்கூட பணமில்லை... கருணை காட்டுங்கள்" - மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்கள் குமுறல்..

ABOUT THE AUTHOR

...view details