மதுரை:மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணி பாரதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு வகை மரங்கள் அடர்த்தியாக இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன்பே முழுவதும் வெட்டப்பட்டுவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்கள் தான் அடர்த்தியாக காணப்படுகின்றன. வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது.
மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும், வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகை மூலம் ஆற்றை மறுசீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று (டிசம்பர்.16) உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பில், “வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர். அதில், தேனி மாவட்டத்தில் 29 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 41 இடங்களிலும் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை உறுதி செய்துள்ளனர்.