மதுரை:திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனு செய்திருந்தார்.
இந்த வழக்கை முன்னர் விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், பழனி கோயில் நிர்வாகம் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கோயில் கிரிவலப் பாதையில் வாகனங்கள் உள்ளே செல்வதைத் தடுக்கும் வகையில் 9 இடங்களில் இரும்பு தூண்கள் மற்றும் தள்ளும் வகையிலான தடுப்புகள் அமைக்கும் பணி 2 வாரங்களில் முடிவடையும்.
அதிகாரிகளின் வாகனங்கள் கொடைக்கானல் சாலை வழியாகக் கோயிலுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், முறையாக சர்வே செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.