மதுரை: திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது எனவும் அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை 3 மாதங்களில் நியமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தனிநபர் உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவற்றை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் விவாகரத்துக் கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவர் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
தனியுரிமை மீறலை அனுமதிக்க முடியாது!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.