மதுரை: ஒவ்வொரு ஆண்டும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் நாள் தேசிய தீயணைப்பு படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச தீயணைக்கும் படையினர் நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
இந்த சிறப்பு நேர்காணலின்போது அவர் பேசியதாவது, "தங்களது பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களை நினைவு கூர்வதற்கு தேசிய அளவில் ஏப்ரல் 14ஆம் நாளையும், சர்வதேச அளவில் நினைவு கூர்வதற்கு மே 4ஆம் நாளையும் நாம் அனுசரித்து வருகிறோம். அதனை ஒட்டி பொதுமக்கள் தீ விபத்து தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு பெற வேண்டும்" என்று கூறினார். மேலும், தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.
காய்ந்த புல்வெளிகள்: கோடைகாலங்களில் அதிக வெப்ப நிலை காரணமாக காய்ந்த புல்வெளிப் பகுதிகளில் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டுள்ள இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்குறிப்பிட்ட பகுதிகள் தீ விபத்துக்கு ஏதுவானதாகும். ஆகையால், தங்களது வாகனங்களை இது போன்ற இடங்களில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கோடை வாசஸ்தலங்கள்:விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளோடு கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவது நல்லது. அதே போன்று ஷாப்பிங் மால்கள் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அதிகமான கூட்ட நெரிசல்கள் மேற்கண்ட இரண்டு இடங்களிலும் தற்போது இருக்கும். இங்கெல்லாம் எதிர்பாராத தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உயிரிழப்புகள் நேரலாம். ஆகையால் கூட்டம் குறைவான நாட்களில், நேரங்களில் இவ்விடங்களுக்கு செல்வது நல்லது.
தீ தடுப்பு சாதனங்கள்:சுற்றுலா தளங்களுக்கோ அல்லது ஷாப்பிங் மால்களுக்கோ செல்ல நேரிடும் போது நீங்கள் உள்ள இடங்களில் போதுமான தீத்தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவை அனைத்தும் பாதுகாப்பானதுதானா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.
இது போன்ற இடங்களில் உள்ள தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியம். அவ்வாறு தெரியவில்லை என்றால் அங்கு அசம்பாவிதம் நிகழும் போது உடனடியாக அவசர வழிகளில் பாதுகாப்பான முறையில் அவ்விடத்தை விட்டு குழந்தைகளோடு அகன்று சென்று விட வேண்டும்.
அதேபோன்று ஏதேனும் மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிட்டால் அங்கு இது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் உள்ளனவா என்பதையும் பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அங்குள்ள அவசரகால வழிகளை முன்னரே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
லிஃப்ட்டு:ஷாப்பிங் மால்கள் மருத்துவமனைகள் பல அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகியவற்றில் அவசர காலங்களின் போது லிஃப்டுகளை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் தீ விபத்து காலங்களில் முதல் நடவடிக்கையாக அங்குள்ள மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். அச்சமயம் லிஃப்ட்டுகள் இயங்காது. அந்த நேரத்தில் நீங்கள் உள்ளே பயணிக்க நேர்ந்தால் அதில் சிக்கி விட வாய்ப்பு ஏற்படும் . இதனால் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எல்பிஜி தீ விபத்துக்கள்:தற்போது எல்பிஜி தீ விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சரியான பராமரிப்பின்மையே. அவற்றை எங்கு வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்ற புரிதல் இன்மை காரணமாக இந்த விபத்துக்கள் நிகழ்கின்றன.
ஆண்டிற்கு ஒரு முறை குழாய், அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை பரிசோதித்து பராமரிப்பது அவசியம். லீக்கேஜ்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டும். அதுபோன்று லீக்கேஜ்கள் ஏற்படும் போது பயந்து ஓடாமல் அந்த சிலிண்டரை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து வைத்து விட வேண்டும்.