திண்டுக்கல்:பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், "பழனி தண்டாயுதபாணி கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றவும், கிரிவலப்பாதையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் செய்து தர” உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதன் அடிப்படையில் 152 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பழனி நகராட்சி ஆணையாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
கடந்த விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழனி கோயில் தேவஸ்தான அலுவலகம் முன்பு நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், நீதிபதி விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்தும், அரசாணையை எதிர்த்தும் எந்த வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை.