மதுரை:2025 ஆம் ஆண்டிற்கான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் நாளை (ஜனவரி 06) திங்கட்கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறுதல் வேண்டும். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14,15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில், கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் நாளை ஜனவரி 06 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரை ஜல்லிக்கட்டு:
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “மதுரை மாவட்டம், தெற்கு வட்டம் அவனியாபுரம் கிராமத்தில் வருகிற ஜனவரி 14 ஆம் தேதியும், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு, அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது.