தண்ணீர் பீய்ச்சும் அழகர் பக்தர்களுக்காக.. மதுரையில் மட்டுமே தயாராகும் சல்லடம் குறித்து சிறப்பு தொகுப்பு! மதுரை:திருமாலிருஞ்சோலையிலிருந்து மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரை வண்டியூர் நோக்கிப் புறப்படும் கள்ளழகர், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று வைகை ஆற்றுக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த வைபவத்தைக் காண்பதற்காக அதிகாலையிலிருந்தே ஆற்றுக்குள்ளும், அதன் கரைப் பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பர்.
சல்லடம் :அச்சமயம் அழகரையும் அவரைக் காண வந்த பொதுமக்களையும் குளிர்விப்பதற்காகத் தண்ணீர் பீய்ச்சியடித்தும், அருள் வாக்குக் கூறி தீப்பந்தம், வெட்டு அருவா ஏந்தியும் வருகின்ற பக்தர்கள், அணிகின்ற பல வண்ண ஆடையைத்தான் சல்லடம் என்கிறோம். இந்த உடை பல்வேறு வேலைப்பாடுகளோடு மதுரையில் மட்டும்தான் தயாராகிறது.
அதற்கான 'ஆடை வடிவமைப்பாளர்கள்' மதுரையின் தனிச்சிறப்பு மிக்க தையல் கலைஞர்கள் ஆவர். மதுரை மீனாட்சி அம்மன் கிழக்குக் கோபுரம் அருகே அமைந்துள்ள குன்னத்தூர் சத்திரத்திற்குள் நுழைந்தால், இந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் காணலாம்.
தற்போது மதுரையில் சித்திரைத் திருவிழாக் காலம் என்பதால், சல்லடம் தைக்கும் பணிகள் இங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல் 'அழகு மலையானுக்கு ஆற்றுகின்ற தொண்டின் ஒரு பகுதியாக இதனைப் பார்க்கிறோம்' என்கின்றனர் சல்லடம் தைக்கும் தையல் கலைஞர்கள்.
இது குறித்து தையல் கலைஞர் கண்ணன் கூறுகையில், "சித்திரைத் திருவிழாவை ஒட்டி சல்லடம் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வோம். சராசரியாக ஒரு கடை 100லிருந்து 200க்கும் மேலான ஆடைகளை விற்பனை செய்வது வழக்கம். தற்போது தேர்தல் நேரம் என்பதால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. ஒரு சில நாட்களில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
தையல் கலைஞர் பிரபு:"கடந்த மூன்று தலைமுறைகளாக இங்கே கடை நடத்தி வருகிறோம். உடைகளைக் கேட்பவர்களின் பண வசதியைப் பொறுத்துத் தைத்துத் தருகிறோம். அழகு மலையானுக்குச் செய்கிற தொண்டின் ஒரு பகுதியாக இதனைப் பார்க்கிறோம்.
சித்திரை பௌர்ணமியன்று வைகை ஆற்றில் மதுரை உள்பட பரமக்குடி, சோழவந்தான் என ஐந்து இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த அழகர் பக்தர்களும் இங்கு வந்துதான் உடைகளை வாங்கிச் செல்கின்றனர். தேர்தல் நேரம் என்பதால் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. பல தலைமுறைகளாகத் தொடரும் இந்த சேவையை இன்னும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்" என்றார்.
கோடாங்கி (மதுரை கடச்சனேந்தல்):"எனது பாட்டானார் தொடங்கி என்னுடைய பேரன் வரை 6 தலைமுறைகளாக நாங்கள் அழகருக்கு வேடமிட்டு தண்ணீர் பீய்ச்சி வருகிறோம். இங்குதான் சல்லடம் வாங்குவது வழக்கம். ஒருமுறை வாங்கினால் இரண்டு ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ளலாம். பெரியவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் சிறியவர்களுக்கு ரூ.1000 வரை இங்கே சல்லடம் கிடைக்கிறது. நமது வசதிக்கு ஏற்றவாறு இங்கே தைத்துக் கொள்ள முடியும்" என்றார்.
குன்னத்தூர் சத்திரம்:மதுரையில் நகரமே கோலாகலமாகக் கொண்டாடும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுவது கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி. இந்த நிகழ்வின் போது அழகர் வேடமிடும் நபர்களுக்கான உடை மட்டுமன்றி, திரி, சாட்டை, வெட்டு அருவா, சலங்கை, தோப்பறை, பீய்ச்சாங்குழல் என அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குன்னத்தூர் சத்திரம்தான்.
புது மண்டபத்தில் தங்களது கடைகளை நடத்தி வந்த இந்தக் கலைஞர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் அதன் அருகேயுள்ள குன்னத்தூர் சத்திரம் பகுதிக்குப் புலம் பெயர்ந்தனர். சற்று ஒடுக்கமான இந்த குன்னத்தூர் சத்திரத்தில் 200 கடைகள் உள்ளன.
இங்கு கிடைக்காத பொருள்களே இல்லை என்ற அளவில் அனைத்தையும் வாங்க முடியும். வருகின்ற ஏப்ரல் 23-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ள நிலையில், மதுரை தற்போது மிகப் பரபரப்பாகத் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் சல்லடம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
இதையும் படிங்க:அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஆட்டுத்தோல் தோப்பறை - பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் வரலாறு!