தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிஸ்டல் பந்து தடை செய்ய கோரிய வழக்கு; மத்திய அரசுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Crystal ball ban: குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிரிஸ்டல் பந்தை தடை செய்ய உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்றால் மத்திய அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 7:15 PM IST

மதுரை:மதுரையைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர், 2018-இல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தற்போது சிறிய மற்றும் பெரிய அளவிலான கடைகளில் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களாக கிரிஸ்டல் பந்து விற்கப்படுகிறது. இந்த பந்துகளை குழந்தைகள் விளையாடுகின்றனர். இந்த வகை பிளாஸ்டிக் பந்து தண்ணீரில் ஊற வைத்து விளையாடப்படும்.

இந்த கிரிஸ்டல் ஜெல்லி பந்தை தண்ணீரில் ஊற வைத்து பெரிதாக்கி விளையாடப்படுகிறது. இந்த பந்தை குழந்தைகள் முழுங்கி விட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும். இந்த பந்து விற்பனை செய்ய பல்வேறு மாநிலங்களில் தடை உள்ளது. ஆனால், தமிழகத்தில் சர்வ சாதாரணமாக சின்ன சின்ன கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், பிளாஸ்டிக் துப்பாக்கியில் சுடுவதற்கு கிரிஸ்டல் பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பந்துகளில் எந்த ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. பொம்மை துப்பாக்கி குண்டுகள் விற்கப்படும் டப்பாவில் சீன மொழியில் எழுதி இருப்பதால், அதன் எச்சரிக்கை புரியாத நிலையில் இருக்கிறது. இதனால், இதன் ஆபத்து தெரியாமல் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த அபாயகரமான கிரிஸ்டல் பந்தை தடை செய்ய வேண்டும் என மனுவில் கூறிருந்தார். இந்த மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த பந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை. மாநில அரசு தனிப்பட்ட முறையில் தடை விதிக்கவும் முடியாது” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் குறித்து மத்திய அரசு தரப்பில் தகவல் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “இந்த வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் மத்திய அரசு தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மத்திய அரசு மீது கடும் அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க:நடப்பாண்டில் தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பில்லை - கே.என்.நேரு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details