மதுரை:காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக அப்போதைய மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமான நிலையம் வந்து, மரியாதை செலுத்தி விட்டு திரும்பும் போது பாஜகவினர் சிலர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசினர்.
இந்தச் சம்பவம் குறித்து 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவைச் சேர்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, “தேசியக்கொடி பொருத்திய வாகனம் மீது செருப்பு வீசி சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். அதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.