தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்; அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? - மதுரைக் கிளை கேள்வி! - madurai bench

Madurai Meenakshi temple: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:46 PM IST

மதுரை:மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை விசாரித்த மதுரைக் கிளை விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா என கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த 2011-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

அதன் படி, கோயிலின் சுவரிலிருந்து கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர வரம்பாக ஒன்பது மீட்டர் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், விதியை மீறி நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் நீண்ட தூரத்திலிருந்து கோயில் கோபுரங்களைப் பார்க்க முடியாததால், பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படுகிறது.

எனவே மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுற்றி உள்ள பகுதிகளில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீது ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மீனாட்சியம்மன் கோயிலைச்சுற்றிக் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மொத்தம் 547 கட்டடங்களை ஆய்வு செய்ததில் 525 கட்டடங்கள் 9 மீட்டருக்கும் மேல் கட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும் இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் அரசாணையை மீறி மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது. மதுரை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டிய உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது.

விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது உறுதியானால் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்போம். 9 மீட்டருக்கு மேல் உள்ள கட்டிடம், அனுமதியற்ற கட்டுமானம், விதிமீறல் கட்டிடம் குறித்து மாநகராட்சி ஆவணங்களில் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. தற்போது வரை 9 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், அனுமதியற்ற விதிமீறல் கட்டிடங்களைக் கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக ஆழ்ந்த தூக்கத்தில் அதிகாரிகள் இருந்தனரா? விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணிகளில் ஒன்று. ஆனால் வெறும் நோட்டீசை மட்டும் அனுப்பிவிட்டு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இந்த வழக்கில் மதுரை மாநகராட்சியோடு உள்ளூர் திட்டக் குழுமத்தையும் சேர்த்து எதிர் மனுதாரராக உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி கட்டிடங்கள் கட்ட 1997க்கு முன் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கொடுத்த அனுமதி எத்தனை? 1997க்கு பிறகு உள்ளூர் திட்டக் குழுமம் கட்டிடங்கள் கட்ட கொடுத்த அனுமதி எத்தனை?

தற்போது வரை விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விரிவான அறிக்கையை ஏப்ரல் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:விண்வெளி ஆராய்ச்சியில் குவியப்போகும் வேலை வாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details