மதுரை: தூத்துக்குடியில் பனை மரம் வெட்டுவதைத் தடுக்க போடப்பட்ட அரசாணையை முறையாக செயல்படுத்தக் கோரிய வழக்கில், பனை மரத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனை மரத்தை நம்பி ஏராளமான பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற உணவுப் பொருட்கள் பிரபலமானது. இவை தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, தற்போது அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் மாநில மரமானது பனைமரம். சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.