மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், "ராமநாதபுரம் திருப்புல்லாணி அருள்மிகு ஆதி ஜெகநாதன் கோயிலின் சாமி நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி" மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மனுதாரர் கோயிலின் உள் பணியாளராக D பிரிவின் கீழ் பணியாற்றி வருகிறார். அதற்கான பதிவிடும் பராமரிக்கப்படுவதால் மனுதாரர் நகைகளை எடுத்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீது தவறுதலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தரப்பில், "ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு 111 கோயில்கள் உள்ளன. சாமியின் சிலைகள் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள கருவூல அறையில் வைக்கப்படும். சாவி ஸ்தனிகர்கள் வசமே இருக்கும். ஒவ்வொரு முறை நகையை வெளியே எடுக்கும் போதும், மீண்டும் வைக்கும் போதும் சரிபார்க்கப்பட்டு, பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனுதாரர் அதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு, ஒப்படைப்பதற்காக கால அவகாசம் கோரினார். ஆனால் 2024 பிப்ரவரி மாதம் வரை ஒப்படைக்கவில்லை. அதன் பின்னரே மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டது.