மதுரை:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயில் அடிவாரம், கிரிவலம் செல்லும் பாதை உள்ளிட்ட கோயில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பழனி வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி நாகராஜன், சண்முகபூபதி, சித்ரா உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர்கள் கோயில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறைக்கு அதிகாரம் உண்டு. அந்த அடிப்படையில், மனுதாரர்களுக்கு ஆக்கிரமிப்பை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “பழனி கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் ஒரு வழக்கில் மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கில், அவருக்கு சாதகமாக தடையாணை பெற்றுள்ளார். அந்த தடையாணையை நீக்கக் கோரி கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
எனவே, அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை பழனி சார்பு நீதிமன்றம் சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் 8 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். விரைவு விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை முடியும் வரை வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். சில வழக்குகளில் கோயில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு இருப்பதாக வருவாய்த்துறை நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் தாங்கள் அந்த சர்வே எண்களில் கடை நடத்தவில்லை, தனியார் பட்டா நிலங்களில் தான் கடைகள் நடத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளனர்.
எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள் கோயில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ள சர்வே எண் களை முறையாக ஆக்கிரமிப்பு உள்ளதாக என அளவீடு செய்ய வேண்டும். அளவீட்டில் ஆக்கிரமிப்பு இருப்பது தெரிய வந்தால் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்” என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:வெற்றி துரைசாமி; 5வது நாளாக தொடரும் தேடுதல் பணியில் இணைந்த கப்பற்படையின் சிறப்பு குழு!