மதுரை: தேனியைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று காலை முதல் இரவு வரை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில், பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும், காலை முதல் இரவு வரை ஊர்வலம் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இரு தரப்பினர் இடையே சிறுமோதல் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் தலையிட்டு மோதலை சரி செய்தனர்.
இருப்பினும், ஆவேசமடைந்த அந்த இரு தரப்பினரும், பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தை கற்களால் தாக்கினர். இந்த வழக்கில் தொடர்பே இல்லாத வகையில் எனது மகனின் கல்விச் செலவுக்காக நண்பரிடம் கடனாக பணம் வாங்க வந்திருந்தேன்.
அப்போது நான் அந்த பகுதியில் நின்று இருந்தேன். அங்கு பாதுகாப்பில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் என்னையும் கைது செய்து சென்று காவல் நிலையத்தில் வைத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த என்னுடைய சாதி பெயரைக் கூறி அவதூறாக பேசி, கடுமையாகத் தாக்கினர்.
இதனால் நான் அரசு மருத்துவமனையிலும், தற்போது வரை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறேன். இது குறித்து நான் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். எனவே, தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் 14-04-2023 அன்று காலை 11 முதல் 15-04-2023 வரை காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களின் காட்சி பதிவுகளை எடுத்து பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்தி குமார் சுகுமார் குரூப் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம்!