மதுரை:கடந்த 2020ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு காரில் 423 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற போது, ராமநாதபுரம் மாவட்டம் பிச்சாணிக்கோட்டை அருகே தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, சிவகங்கை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒரு காரில் 144 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், உசிலம்காடு பகுதியைச் சேர்ந்த பரிமளாதாஸ் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பரிமளாதாஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி அறிக்கை சமர்ப்பித்தார். அதில், “தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை ஒடிசாவைச் சேர்ந்த 716 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 பேர், ஜார்கண்டைச் சேர்ந்த 45 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 486 வெளி மாநில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது பல்வேறு கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. போதை கடத்தலை தொடர்ந்து செய்யும் குற்றவாளிகளாக இவர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றங்களை சமூகத்திற்கு எதிரான குற்றமாக பார்க்க வேண்டும்.
இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் போதைப் பொருள் தடுப்பு (NIP- CID) பிரிவின் நடவடிக்கைக்கு பாராட்டுகள். அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது மட்டும் போதாது. இது போன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றச் செயலில் உள்ள தொடர்பை போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு அமைப்பு கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கு விசாரணை வெற்றி பெற முடியும்.
எனவே, NIB-CID-இன் விசாரணை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். இந்த வழக்கை முழுமையாக கண்காணிக்க வேண்டும்” என போதை தடுப்பு பிரிவு கூடுதல் தலைமை (ADGP) இயக்குநருக்கு உத்தரவிட்டு, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: உருவத்தில் மட்டுமல்ல +2 மார்க்கிலும் ஒற்றுமை.. வேதாரண்யம் இரட்டை சகோதரர்களின் சுவாரஸ்யம்! - TN 12th Exam Result