தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - ஆர்டிஐ வெளியிட்ட தகவல்! - MADURAI AIIMS HOSPITAL

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவுற்று வருகின்ற 2027-இல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும், முதற்கட்டமாக ரூ.1118.35 கோடிக்கு முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடக்கம் எனவும் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை எய்ம்ஸ், ஆர்டிஐ கோப்புப்படம்
மதுரை எய்ம்ஸ், ஆர்டிஐ கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 10:15 AM IST

மதுரை:மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் (AIIMS Madurai) கட்டுமான பணிகள் நிறைவுற்று வருகின்ற 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும், முதற்கட்டமாக ரூ.1118.35 கோடிக்கு முதற்கட்ட கட்டுமான பணிகள் துவக்கம் எனவும் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் கனவாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது மதுரை எய்ம்ஸ். இந்த மருத்துவமனைக்கு நிர்வாக அலுவலகம் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்டிஐ-ல் கேள்வி எழுப்பி இருந்தார். தற்போது அதற்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலரும் பதிலளித்துள்ளார்.

33 மாதம் இலக்கு:

எய்ம்ஸ் (ETV Bharat Tamil Nadu)

அதில், "மதுரை எய்ம்ஸ்-இன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு, 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், விடுதிகட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது‌" என அந்த ஆர்டிஐயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் கடந்து வந்த பாதைகள்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை (ETV Bharat Tamil Nadu)
  1. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட தேதி: 28.02.2015
  2. மதுரை தோப்பூரில் இடம் தேர்வு: 18.06.2018
  3. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய தேதி: 17.12.2018
  4. மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட தேதி: 27.01.2019
  5. சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்பட்டது: 25.11.2019
  6. மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்ட தேதி: 03.11.2020
  7. நிர்வாக இயக்குநர் அறிவிப்பு: 22.02.2021
  8. கடன் ஒப்பந்தம் கையெழுத்து: 26.03.2021

எய்ம்ஸ்க்கான சிறப்பு ஆர்டிஐ இணையதளம்:

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், மதுரை எய்ம்ஸ்சுக்கான சிறப்பு ஆர்டிஐ இணையதளம் தொடங்கி முதல்முறையாக நான் எழுப்பிய ஆர்டிஐ கேள்விகளுக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பதில் அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஆர்டிஐயில் கேட்ட கேள்விகளுக்கு எப்போது தொடங்கும் என்ற தேதி தெரியாமலே இருந்து வந்த நிலையில், தற்போது எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள்.

காலக்கெடுக்குள் முடிக்க கோரிக்கை:

மதுரை எய்ம்ஸ் தொடர்பான ஆர்டிஐ அறிக்கை (ETV Bharat Tamil Nadu)

பிப்ரவரி 2027-க்குள் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பிப்ரவரி 2015-iல் அறிவிக்கப்பட்டு ஜனவரி 2019-இல் அடிக்கல் நாட்டப்பட்டு ஏறத்தாழ 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறும் என்பது வருத்தமளிக்கிறது.

இதையும் படிங்க:"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விடாமல் திமுக தடுக்கிறது" - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

எனவே, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேலும் தாமதம் செய்யாமல் உரிய நேரத்தில் ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து நிதியைப் பெற்றும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய திட்ட நிதியையும் உடனடியாக வழங்கி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை குறித்த காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு, மதுரையில் மட்டும் பணிகள் நடக்காமல் இருந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பாக எழுந்த தொடர் விமர்சனம் மற்றும் புகாரைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு இன்னும் 36 மாதங்களில் முழுமையாக முடித்து தரும் என எதிர்பார்க்கிறோம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்திருந்தது.

ABOUT THE AUTHOR

...view details