சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5 முதல் 9 வரை தேசிய மாணவர் படையின் (என்சிசி) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 9 அன்று கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மாணவியை, அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் பாலியல் தொல்லை செய்துள்ளார். பின்னர், இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி மற்றும் சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் போலியாக என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலையில் உயிரிழந்தார். மேலும், சிவராமனின் தந்தையும் வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், சிவராமனின் மரணம் திட்டமிட்டே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அல்லது சிறப்புக் குழு விசாரணை செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் 4 பயிற்சி முகாம்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு.. தந்தை விபத்தில் இறந்த சோகம்!