தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான குடியிருப்பு மோசடி வழக்கு.. விரைவில் தீர்ப்பு..? - MA SUBRAMANIAN LAND GRABBING CASE

தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்)
அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2024, 5:35 PM IST

சென்னை:கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போது, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி, ஊழல் தடுப்பு சட்டபிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை, நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில், கடந்த 1998ம் ஆண்டு வீடு வாங்கியது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விற்பனை நடந்ததாக கூறப்படும் காலத்தில் மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நிலையில், வழக்கு தொடர சபாநாயகர் அனுமதியளிக்க அதிகாரம் இல்லை.

சிட்கோ புகார் அளிக்கவில்லை

குடியிருப்பை வாங்கியது சிட்கோவுக்கு தெரியும். இதில் அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை. எந்த மோசடியும் நடைபெறவில்லை. மோசடி என்றால் சிட்கோ புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் சிட்கோ புகார் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுமனை ஒதுக்கீட்டை முறைப்படுத்த 2008ல் அரசு கொள்கை முடிவெடுத்த நிலையில், மோசடி என 2018ம் ஆண்டு புகார் அளிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் எவரும் விசாரிக்கப்படவில்லை. எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அப்போது, ஆட்சியில் இருந்தவர்களை மகிழ்விக்க அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

வாதங்கள்

காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை விளக்கி வாதிடப்பட்டது. மேலும், குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என வாதிடப்பட்டது. இதேபோல வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details