சென்னை:சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்ததாக மாவட்ட பதிவாளர் மீது ஆதாரங்கள் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயலாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ரத்து செய்துள்ளது.
தாம்பரம் வட்டத்தில் உள்ள உள்ளகரத்தில் குறிப்பிட்ட நிலத்தைப் பதிவு செய்யக்கோரி 2005ஆம் ஆண்டு ஆலந்தூர் பத்திரப்பதிவுத்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால் 2010ஆம் ஆண்டு வரை பதிவு செய்யாமல் நிலுவையில் இருந்தது. நிலுவையில் இருந்த மனுவை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி அறிவுறுத்தலின்படி, மாவட்ட பதிவாளராக இருந்த ஏ.பி ராஜூ விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அது புறம்போக்கு நிலம் இல்லை என்பதால், பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்தார். இந்நிலையில், இந்த பத்திரப்பதிவில் சந்தேகம் இருப்பதாகக் கருதி 7 ஆண்டுகளுக்குப் பின் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையில் மாவட்ட பதிவாளர் ஏ.பி ராஜூ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை எதிர்த்து ஏ.பி ராஜூ தொடர்ந்த வழக்கை காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க:சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: மதுரை சிறைக்கு மாற்றக்கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு!
இதனை எதிர்த்து ஏ.பி ராஜூ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன் நேற்று (ஜனவரி. 14) விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த 1993ஆம் ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட இடம் குடியிருப்புகளாக இருந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்ததாக வருவாய்த்துறைக்கு எந்த புகாரும் அளிக்கவில்லை. அதனால், மாவட்ட பதிவாளருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாமல் வழக்கில் சேர்ப்பது மனித உரிமையை மீறிய செயலாகும் எனக் கூறி ஏ.பி ராஜூ மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.