சென்னை:புதுச்சேரி மருத்துவக் கல்லூரி சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2017-18ம் ஆண்டில் 26 மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை தேசிய மருத்துவ கவுன்சில் விதிப்படி நடைபெறவில்லை எனக்கூறி, மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, மருத்துவ படிப்பை முடித்த 26 மாணவர்களில் சிலர் மேல்படிப்பிலும், மற்றவர்கள் மருத்துவர்களாகவும் தொழில் புரிந்து வருகின்றனர். அதனால் தற்போது உத்தரவு பிறப்பித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் தேசிய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது. அதனால் புதுச்சேரி மருத்துவ கல்லூரி அடுத்த 2 ஆண்டுகளுக்கு சேர்க்கை நடத்த தடை விதிக்க மருத்துவ குழு முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.