சென்னை:சென்னை பெரவள்ளூரில் குமார் என்பவருக்கு சொந்தமான கடையை, பெரம்பூரைச் சேர்ந்த முகமது அபுதாஹிர் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார். இந்நிலையில் ராஜாபாதர் என்பவர் தலையிட்டுக் கூடுதல் வாடகை கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால், போலீசார் தூண்டுதலின் பேரில் கடைக்கு சீல் வைத்ததாகவும், சீலை அகற்றவும், கடையை நடத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி முகமது அபுதாஹிர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அபுதாஹிரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தமில்லாமல் தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்த்தார். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த வாய்மொழி உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தனது பெயரைக் குறிப்பிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.