சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமுல்லைவாயலைச் சேர்ந்த டி.எச்.ராஜ்மோகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'சென்னையை அடுத்து உள்ள திருமுல்லைவாயலில் வனத்துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கர் நிலத்தை 'இம்பீரியல் கெமிக்கல்' நிறுவனத்துக்கு 1942-ஆம் ஆண்டு நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
பின்னர், இந்த நிறுவனத்தின் பெயர் 'கிரசன்ட் டைஸ் அண்டு கெமிக்கல்' (Crescent dyes and chemicals ltd) என்று 1983-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் தன் அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி வனத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த்துறை நிலமாக மாற்றி, அந்த நிலத்தை அந்த கம்பெனி நிலமாக மாற்றியிருக்கிறார்.
அந்த நிறுவனத்திடம் இருந்து தன் பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். எனவே, இந்த நிலத்தை மீட்டு, மீண்டும் வனத்துறை நிலமாக மாற்றும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.