சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு உள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.