சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், தமிழக அரசு 99 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்திய ஞான சபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு இடம் வழிபாட்டு இடம் என்பதால் அங்கு எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், “குற்றச்சாட்டுகளாக சொல்லாதீர்கள். அதில் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தருவது மாநில அரசின் பொறுப்பு. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட குறைந்தபட்ச சுகாதார வசதிகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமை” என்று குறிப்பிட்டனர்.
மேலும், நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அரசின் மீது தான் குறை சொல்வார்கள் என்றும் சுட்டிக் காட்டினா். அதேநேரம், கோயிலுக்கு பக்தர்கள் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ள நிலையில், அரசுத் தரப்பில் 71 ஏக்கர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, இந்து அறநிலையத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், கடந்த 1938ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை இந்தக் கோயிலை கட்டுப்பாட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது என்று தெரிவித்தார். மேலும், 33.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து மீட்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் தூண்டுதலினால் தான் கட்டுமானங்களுக்கு எதிராக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள சத்திய ஞான சபைக்குச் சொந்தமாக 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒரு மாதத்தில் அமைத்து அடையாளம் காண வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சத்திய ஞான சபை மீது அக்கறை உள்ளவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த பட்டியலை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க:வடலூர் சுத்த சன்மார்க்க அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!