தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காயம் பழசு'.. புழல் சிறையில் விசாரணை கைதி தாக்கப்பட்டதாக வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..! - PUZHAL JAIL PRISONER ATTACK

புழல் சிறையில் விசாரணை கைதி தாக்கப்பட்டது குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 4:32 PM IST

சென்னை: சென்னையை அடுத்த திருவெற்றியூரைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தனது மகன் ஜெயந்தன் புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். கடந்த அக்டோபர் 17-ந்தேதி வழக்கறிஞர் ஒருவர், தனது மகனை பிரசாந்த் பாண்டியன் என்ற சிறை அதிகாரி கொடூரமாக தாக்கியதில், படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவனுக்கு சிகிச்சை அளிக்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்.

இதையடுத்து, மறுநாளே புழல் சிறைக்கு என் மகனை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, தனது மகன் முகம் முழுவதும் குறிப்பாக, வலது கண்ணில் படுகாயம் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பக்கத்தில் சிறை அதிகாரிகள் இருந்ததால், அவன் ஒரு வித அச்ச உணர்வுடன் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தான்.

காயம் பழசு

உடனே சிறை கண்கானிப்பாளரை சந்தித்து தனது மகனுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்க சென்றேன். ஆனால், அவரை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. ஜெயிலரை போனில் தொடர்புக் கொண்டு பேசியபோது, கண்ணில் பட்ட காயம் பழசு என்றும் அப்போது எடுத்த சிகிச்சை ஆவணங்களை எடுத்து வந்தால், என் மகனுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

உடனே வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை ஆவணங்களை எடுத்துக் கொண்டுபோய் சிறை அதிகாரிகளிடம் கொடுத்தேன். பின்னர், அதே போன் நம்பரில் தொடர்புக் கொண்டு என் மகன் குறித்து கேட்டபோது, அதில் பேசியவர் என்னை கடுமையாக திட்டினார். உடனே சிறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தேன்.

இதையடுத்து, இந்த காயம் எல்லாம் தானே ஏற்படுத்திக் கொண்டதாக எழுதிக் கொடுத்தால்தான் சிகிச்சை அளிப்போம் என்று என் மகனை மிரட்டி அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது என் மகனை சந்திக்க அவனது வழக்கறிஞரை கூட அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. அதனால், என் மகனை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய சிறை அதிகாரி பிரசாந்த் பாண்டியன், சிறை சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி., ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் முன்பு வந்தபோது, வழக்கறிஞர் என். நிஷார் அகமது ஆஜராகி, "மனுதாரர் மகனை இரண்டு முறை மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். கீழே விழுந்து காயம் அடைந்தார் என்று அதிகாரிகள் கூறினால், கீழே விழுந்தவர் எதற்காக எழுதிக் கொடுக்கவேண்டும்? என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு, சிறைக்கு நேரில் சென்று மனுதாரரின் மகனிடம் விசாரணை நடத்தி, வருகிற 17-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details