சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் கிரிவலப் பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கிரிவலப் பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு கழிப்பறைகளும், செப்டிக் டேங்க்குகளும் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு வனத்துறை அதிகாரிகளும், நகராட்சி மற்றும் மின் துறை அதிகாரிகளுமே பொறுப்பு எனவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மலைப்பகுதி லே-அவுட் ஆகிவிடும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, திருவண்ணாமலை மலையே சிவன் தான் எனவும், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்குகளும் கட்ட அனுமதிக்கலாம் என அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், வனத்துறை, வருவாய்த்துறை, விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:2019 நீட் தேர்வு வழக்கு; சிபிசிஐடி கோரும் ஆவணங்களை தாக்கல் செய்ய என்டிஏ-க்கு கெடு! - NEET 2019 Case